விவாதிக்கலாமே..!

“பணத்தைப் புதைத்து வைக்கிறீர்கள்..
பிணத்தைப் புதைக்க மறுக்கிறீர்கள்!
பிணத்தை எக்காரணம் கொண்டும்
எரியூட்டக் கூடாது!
அது கொலைக்குச் சமானம்!” -என்பதை
வலியுறுத்தும்
வள்ளல் பெருமான்,
பிணத்தில்.. “தனஞ் செயன் ”
என்னும் வாயு இருப்பதாகச்
சொல்கிறார்!
தனஞ் செயன் பற்றி
சன்மார்க்கிகள் விவாதிக்கலாமே..!

பறவையைக் கொன்றால் மறுபடி பறக்குமா!

புலால் உண்பது பொறிகளை அழிக்கும்!
புன்புலால் யாக்கை வளர்ப்ப தற்காக
புலால் உண்பதால் கெடுதியே சிறக்கும்!
தாவர உணவே சாத்வீக உணவு!
அதுவே இயற்கையாய் அமைந்த உணவு !
ஆருயிர் கொல்லாத அறிவார்ந்த உணவு!
ஆமாம்..அதுசரி..!அப்படி என்றால்
தழைத்து வளரும் தாவரங்க ளான
மரமும் – நெல்லும் – மாடுண்ணும் புல்லும்
உணர்ந்து பார்த்தால் உயிர்கள் தானே !
தாவர உயிர்கள் தம்மை அழித்து
நா- அரும்பெல்லாம் நத்திடச் சுவைக்கும்
அந்தச் செயலும் அகிம்சைக்கு எதிராய்
ஆவது தானே ..? அதுகுற்றம் இல்லையா..?
ஜீவ காருண்யம் என்று பார்த்தால்
தாவ ரங்களை அழிப்பதும் பாவம்!
தாவ ரங்களை உண்பதும் பாவம் !
என்பதில் அர்த்தம் எதுவும் இல்லையா!
இல்லை என்கிறார் எம்பெரு மானார்!
ஓரறி வுடைய உயிர்களுக் குள்ளும்
ஜீவ விளக்கம் உண்டென் றாலும்
பூக்கள்,காய்கள்,கனிகள் ,கிழங்குகள்
தழைகள் கீரைகள் வித்துகள் யாவும்
உயிர்கள் தோன்றும் இடங்களே அன்றி
அவைகளே உயிராய்க் காண்பது இல்லை!
அவற்றில் தனியாய் உயிரும் இல்லை!
மண்ணும் நீரும் வித்தும் சேர்ந்தே
உயிர்கள் தோன்றும் உலகில்;ஆதலால்
அவற்றைப் பறிப்பதும் உண்பதும் அவற்றை
ஊறு செய்வதாய் ஒருபோதும் எண்ணற்க!
கைவிரல் நகத்தை வெட்டும் போதும்
காணும் முடியைச் சிரைக்கும் போதும்
ஏதும் துன்பம் ஏற்படு வதுண்டோ..?
மீண்டும் அவைதான் முளைக்குமே அன்றி
யாண்டும் துயரம் விளைவதே இல்லை!
அதுபோல் தாவர உயிர்களைப் பறித்தால்
அவையும் துன்பம் அடைவதே இல்லை!
அதுமட்டும் அன்று ! அவற்றின் வித்தை
நன்னிலம் ஒன்றில் நாமே விதைத்து
மேலும் மேலும் உற்பத்தி செய்யலாம்!
கோழி கழுத்தை வெட்டினால் முளைக்குமா!
ஆடு மாடுகள் அறுத்தால் தழைக்குமா!
பறவையைக் கொன்றால் மறுபடி பறக்குமா!
ஆகவே..தாவர உணவே சிறந்தது!
அதனால் உயிர்க் கொலை மட்டுமே கொடியது!
அறிவீர் என்கிறார் அருள்நிறை வள்ளலார்!
அறிவோம் உலகீர்! அணிதிரள் வீ ரே!
புரியோம் உயிர்க்கொலை! புரிவோம் சன்மார்க்கம்!
நெறியில் நிற்போம்! நிலத்தில் வாழும்
அரிய கலைகள் அருட்பெருஞ் சோதி
ஆண்டவ ரிடத்தில் அனைவரும் கற்போம்!

எது கடவுள் வழிபாடு…?

எது கடவுள் வழிபாடு?
இதுபற்றிய தெளிவு
எதுவுமே இல்லாமல்
தொடர்கிறது–
வழிபாடு என்னும் பெயரில்
வழக்கமான சடங்குகள்!
கருவறையில் கற்பூர ஆராதனை–
மணக்கும் மலர்களால் அர்ச்சனை–
கண்மூடிக் கொண்டு
துதிப்பாடல்கள்–
மலைக்க வைக்கும்
மந்திர உச்சாடனம்–
பல்லாயிரம் லிட்டர்
பாலாபிஷேகம் —
கோலாகலமான
கும்பாபிஷேகம் —
தெருக்களைத் திணறவைக்கும்
தேர்த் திருவிழா–
இவைகள்தான் இறைவழிபாடு என்று
மடமை மண்டிய ஓர்
மகத்தான இருள்
மனித குலத்தைக்
கவ்விப் பிடித்திருக்கிறது–
கால காலமாய்..!
எல்லா உயிர்களையும்
இதயமார நேசிக்கும்
ஜீவ காருண்யம்தான்
சிவ காருண்யத்திற்கு
அடிப்படை என்கிறார் —
வடலூர் வள்ளல் பெருமான்!
எவ்வுயிரும் தம்முயிர்போல் என்னும்
ஜீவகாருண்யம் ஒன்றுதான்
மனிதகுலத்தை
மகிமை செய்யக் கூடியது என்கிறார்–பெருமான்!
ஞானம்–யோகம் –தவம்–விரதம்–ஜெபம்–தியானம்–
என்று,
எத்தனை முயன்று
தன்னைத் தானே இடர்ப் படுத்திக் கொண்டு
காலையும் மாலையும் தட்டினாலும்
மோட்சக் கதவு திறக்காது–என்று
முழு எச்சரிக்கை செய்கிறார் பெருமான்!
அறிவு விளங்கிய ஜீவர்கள்
எல்லாம் —
அருந்தல் –பொருந்தல் முதலிய
பிரபஞ்ச போகங்களை
அனுபவிக்கின்ற சமுசாரிகள் எல்லாம்–
சர்வ சக்தி உடைய கடவுளுக்குப்
பாத்திரர்கள் ஆகவேண்டும் என்றால்–
ஜீவகாருண்ய ஒழுக்கமே
முதலும் கடைசியுமான வழி என்பது
பெருமானின் கட்டளை!
கட்டளை ஏற்றுக்
கடமை செய்வோம் வாரீர் —
மண்ணுலகுக்கு ..
மகா ஜனங்களே!
கவிஞர் கங்கை மணிமாறன்
சென்னை–120
செல்;9443408824

யாருமே அணைக்கவில்லை..!

எரிந்து கொண்டிருக்கிறது..
யாருமே அணைக்கவில்லை..!
—ஏழையின் வயிறு!
இப்படி ஒரு புதுக் கவிதை
எங்கோ படித்த நினைவு!
இந்தத் தீ ..
இன்று நேற்று ஏற்பட்டதா..
எத்தனையோ யுகமாய்
மனித குலத்தோடு
மரிக்காமல்
தொடர்கிறது..இன்றுவரை!
பசிக்காமல் வாழ்கிற பக்குவத்தைப்
படைக்காமல் விட்டானே இறைவன் என்று
பல நேரம் துடிக்கிறது–நெஞ்சு!
எல்லாருக்கும் எல்லாமான வாழ்க்கை
இல்லாமல் போய்விட்டதே என்று
எரிகிறது–மனம்!
எங்கும் இருக்கிறது இல்லாமை!
இல்லாமை இல்லாமல்
இல்லை ஒரு வாழ்க்கை!
இல்லாதவர் படும்பாடு
எழுத்தில் வருணிக்கவும் வார்த்தைகள்
இல்லாமல்தான் போகிறது!
இறைவன் படைப்பில் ஏனிந்தப் பாகுபாடு என்று
ஏராளமாய்க் கேள்விகள்
எழத்தான் செய்கின்றன –எப்போதும்!
நாத்திகம் பேசி நாத்தழும்பேறிய வாய்களுக்கு முன்
நற்றமிழ் பேசிட நரம்பில்லாமல் போகிறது!
நலிந்து கிடக்கும் நாட்டின் வரலாறு மாற
நாம்தான் ஏதாவது செய்ய வேண்டும்!
பசிவயிற்றில் பால்வார்க்க
தற்காலிகமாகவேனும் ஏதேனும் செய்யத்தான் வேண்டும் !
என் கிராமத்திலேயே
என் விழிகள் காணும் பசிப் புலம்பல்–
இன்னும் மாறாமல்தான் இருக்கிறது சமூகம்
என்பதைச் சொல்லாமல் சொல்கிறது!
இருப்பவன் கூட
இயலாதவர்களுக்கு இடுவதில்லை எதுவும்!
சொந்த வீட்டிலேயே
சோகமாய்க் கிடக்கிறார்கள் முதியோர்கள்!
ஒருவேளை வாய்க்கு ருசியாய்
உணவு கிடைக்காதா என்று
படபடக்கின்றன–அவர்களின்
பார்வையும் வறண்டுபோன உதடுகளும்!
சிங்காரச் சென்னை விட்டு என்
சிற்றூருக்குச் செல்லும் போதெல்லாம்
ஒருவாய் தேநீருக்கும்
ஒருவேளைச் சாப்பாட்டுக்கும்
என்னிடம் கையேந்த வரும்
பழகிய அந்தப் பழங்காலத் தலைமுறையைப்
பார்க்கும் போதெல்லாம்
சுட்டுவிடும் இதயம்!
இறுதிக் காலத்தில் இப்படித்தான் எல்லோரும்
புறக்கணிக்கப் படுவார்களா…
இது ஒரு சாபக் கேடா..
இதை மாற்ற ஏதாவது செய்தால் என்ன
என்னும் எண்ணத்தின் வெளிப்பாடுதான் —
நான் தொடங்க இருக்கும் அறக்கட்டளை!
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்–என்கிறார் வள்ளுவர்!
அடுத்தவர்–அல்லது அடுத்ததன் உணர்வை மதிக்காதவன்
மனிதன் இல்லை!
அவன் நடமாடும் பிணம் என்கிறார்–குறளார்!
வள்ளலாரும் அதை வழி மொழிகிறார்.
எனவே அவர்கள் வழியில் நின்று
அன்ன தானம் –ஞான தானம் -சமாதானம்
பரிசுகள்-உதவிகள் –பாராட்டு-மரம் வளர்த்தல் என்று
பல வழிகளிலும் பொதுத் தொண்டுக்கான
புதுப் பாதை காண்பது என்று முடிவெடுத்துள்ளேன்!
ஆரம்பம் சிரமமாகத் தான் தெரிகிறது!
பசிப் பிணி அறுப்பது
சாதாரண வேலை இல்லை என்பதும் புரிகிறது!
நூறாண்டுகளுக்கும் மேலாய்
வடலூரில் எரியும் அணையாத அடுப்பு
பிரமிப்பாய் இருக்கிறது!
இருக்கிறார்கள் புரவலர்கள் என்று
மனம் திடம் சொல்கிறது!
95 –கெட்டவர்கள் இருந்தாலும்
5 –நல்லவர்களைக் காப்பாற்ற வேண்டித்தான்
பூமாதேவியே
பொறுமையாய் இருக்கிறாள்–
என்கிறார் வள்ளுவர்!
வள்ளுவரிடமும் வள்ளலாரிடமும்
இல்லாத தீர்வுகள்
எதுவும் இல்லை என்பது உண்மை அல்லவா!
ஆகஸ்டு 28 –ல்
காலை முதல் நள்ளிரவு வரை
என் கிராமம் காணாத விழாவை
நலிவு மிகக் கொண்டு நடத்த முற்பட்டுள்ளேன்!
நல்லார் துணை வேண்டித் தவம் இருக்கிறேன்!
இளைய தலை முறைக்கு
நன்னெறி புகட்ட வேண்டி
வள்ளலார் பற்றிய ஒரு மாபெரும் பேச்சுப் போட்டி
நடத்துவதற்குத் திட்டமிட்ட போது —
அதற்கான செலவுத் தொகையை
மதிப்புக்குரிய நண்பர்
ராஜகோபாலன் பாபு அவர்கள்
ஏற்றுக் கொண்டார் !
எத்துணை பெரிய இதயம் அவருக்கு!
ஒரு பாரம் இறங்கிய உணர்வில்
உள்ளம் லேசானது!
அடுத்த பெரும் பாரம்
அன்னதானம் தான்!
பாரம் என நினைப்பதே பாவம் என்று என்
பகுத்தறிவு பகர்கிறது!
என்செய்வது..!
சமையலருக்கும்–சமைப்பதற்கும்
நாற்பத்து இரண்டாயிரம் ரூபாய் ஆகிறது!
ஒரு நாள் முழுக்க–ஏறத்தாழ
800 -பேருக்குச் சாப்பாடு என்று
நிகழ்ச்சி முடியும் வரை
அறிவிக்கப் பட்டுள்ளது!
பந்தல்– நாற்காலி–மேடை– பேச்சாளர்கள்–
ஒலிபெருக்கி–நிழற்படம்–வில்லுப் பாட்டு என்று
விரிகிறது நிகழ்ச்சி!
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருக்கிறது!
முதல் அனுபவம் ஆதலால் —
மூச்சு முட்டுகிறது!
யாரிடம் எப்படிக் கேட்பது என்பது கூடச்
சரிவரத் தோன்றவில்லை!
சன்மார்க்க அன்பர்கள்–
சத்திய சீலர்கள் —
சங்கம் கண்டவர்கள் —
சாதித்தவர்கள் –கை கொடுங்களேன்!-என்று
கவிதையில் யாசிக்கிறது உள்ளம்!
நிதி மிகுந்தவர் -பொற்குவை தாரீர்..
நிதி குறைந்தவர்–காசுகள் தாரீர்–
அதுவும் அற்றவர் வாய்ச் சொல் அருளீர்–என்றான்
பாரதிப் புலவன்!
அதை அப்படியே கடைப் பிடியுங்களேன்
அன்பர்களே!–என்று
அறிவு விண்ணப்பிக்கிறது!
ஆர்வப் பெருக்கில்
அல்லாடுகின்றேன் !
மனமெலாம் நைந்து
மன்றாடுகின்றேன்!
மாண்புமிகு மனிதர்காள்..!
மனம் வையுங்களேன் ..!
மனித நேயமுடன்..

கவிஞர் கங்கை மணிமாறன் எம்.ஏ.,பி.எட்.
அத்திப்பட்டுக் குடியிருப்பு
சென்னை-120
செல்>9443408824
மின் அஞ்சல்:rgangaimanimaran@gmail.com

அன்னதானத்திற்கு உதவுங்கள் வள்ளல்களே..!

அன்னதானத்திற்கு உதவுங்கள் வள்ளல்களே..!
அருட்பெருஞ் சோதி ஆண்டவர் அருளால்
அடியேன் தொடங்கும் அறக் கட்டளைக்கு
நல்லோர் பல்லோர் நற்கரம் நீட்டி
நயத்தகு முறையில் நல்லுரை புகன்று
வாழிய என்று வாழ்த்துகள் வழங்கி
வருவதைக் கண்டு மகிழ்கின் றேன்நான்!
புதிய அனுபவம் ;புதிதாய்ப் பயணம்;
புதிய கோலங்கள் பூப்பன கண்டு
சற்றே கலக்கம் சந்தித்த நெஞ்சில்
சாதிக்கும் எண்ணம் சங்க மித்ததால்
வள்ளல் பெருமான் வழங்கிய துணிவில்
வள்ளல் குணத்தார் வரிசையைத் தேடி
அங்கும் இங்கும் அவாவு கின்றேன்!
அன்ன தானம் அதுவொன் றுக்கே
நாற்ப தாயிரம் நல்கிட வேண்டும்!
நல்லோர் இதற்குத் துணைவர வேண்டும்!
முதல் நாள் இரவு ஐம்பது பேர்க்கும்
மறுநாள் காலை ஒரு நூறு பேர்க்கும்
அற்றைப் பகலில் ஐநூறு பேர்க்கும்
அன்றைக் கிரவில் இருநூறு பேர்க்கும்
அடியேன் அன்னம் அளித்திடத் திட்டம்
ஆக்கி வைத்ததை ஆண்டவன் அறிவான்!
அதற்குத் தேவை நாற்ப தாயிரம்!
அள்ளித் தருகிற வள்ளல் மனிதர்கள்—
அடியிணை வணங்கி அர்ச்சிக் கிறேன்நான்!
அள்ளக் குறையா அமுத சுரபியாய்
ஆகும் உங்கள் களஞ்சியம் ஐயா!
அடியேன் புலவன்; அறவுரை பகரும்
அருந்தமிழ்க் கவிஞன்! ஆன்மிக வாதி!
பேசி வாழ்ந்தவன்; பேசியே வாழ்ந்தால்
பிழைபடும் வாழ்வெனப்… பீடு மிகுந்த
வழிகளைத் தேடி வாடிய போது—
வள்ளல் பெருமான் அடிகளில் வீழ்ந்தவன்!
பசியைப் பற்றிப் பாடிய புலவரும்
பசியின் கொடுமைகள் பரப்பிய தலைவரும் –
பசிப்பிணி என்று பரிதவித் தவரும்
பலப்பல பேர்கள் பாரினில் உண்டு !
பசிக்கொரு மருந்து படைப்பதை நினைந்து
புசிப்பதே மருந்தெனப் புவியெலாம் வியக்க
சாலை கண்ட சரித்திரப் புருஷர்
சத்திய மாக வள்ளலார் தானே!
சொல்லுதல் யார்க்கும் எளிய என்பதும்
சொல்லிய வண்ணம் செய்தல் என்பதே
அரிய தென்பதும் அறிவோம் நாமே!
அதனைச் செய்தவர்; அறிவில் உயர்ந்தவர் ;
இரக்கக் குணத்தில் இமயம் போன்றவர்;
இதயம் முழுக்க இறைவ னானவர்;
வடலூர் வள்ளல் ஒருவரே தானே!
வாழ்வாங்கு வாழ வழிவ குத்தவர்;
சமயப் புரட்சி; சமுதாய எழுச்சி ;
சன்மார்க்க உணர்ச்சி தந்து சென்றவர்–
அவர்போல் ஒருவர் ஆருளார் இங்கே!
ஆகவே அவரின் அடித்தடம் பற்றி
அன்ன தானமும் ஞான தானமும்
நான்பி றந்த நல்ல கிராமத்தில்
நடத்திட எண்ணி நாளும் குறித்தேன்!
ஆகஸ்டுத் திங்கள் இருபத் தெட்டில்
ஆதவன் உதிக்கும் அந்த வேளையில்
அருட்பெருஞ் ஜோதி அகவல் பாடி
அன்று முழுதும் அற்புத மான
நிகழ்ச்சிகள் பலவும் நிகழ்த்திடத் துணிந்தேன்!
சாலைச் சோலை என்னும் திட்டம்
காலையில் தொடங்கி வைப்பதற் காக
மயிலாடு துறைப் பாராளு மன்ற
மாண்புமிகு உறுப்பினர் ஓ.எஸ்.மணியன்
வருகிறார்! அன்ன தானம் வழங்கிட
வருகிறார் பூம்புகார்ப் பேரவை உறுப்பினர்–
பண்பாடு மிகுந்த பவுன் ராஜ் அவர்கள்!
பன்னெடுங் காலமாய் சன்மார்க்கம் தழைக்க
எங்கள் பகுதியில் எறும்பென உழைக்கும்
இனியவர் எண்மர் தம்மை அழைத்துப்
பாராட்டி வாழ்த்துப் பாவும் இசைத்து
பண்புக்கு நினைவாய்ப் பரிசும் கொடுத்து
உற்சாகப் படுத்தி உயர்வடை கின்றேன்!
உள்ளூர் தன்னில் ஓரிரு சான்றோர்
ஆதி திராவிடர் ஆன போதிலும்
ஆற்றல் மிகுந்த அருட்பெருஞ் ஜோதி
அருட்பா பாடும் அறிவின் மிக்கார்!
எண்பதைத் தாண்டிய அகவை எனினும்
இன்றுமென் னோடு அகவல் பேசுவார்!
வடலூர் சென்று வருகிற வழக்கம்
வாழ்நாள் முடியும் வரையிலும் உண்டெனச்
சொல்வதில் அன்னார் சுகம் காண்பவர்!
அந்தத் தமிழர் இரண்டு பேரையும்
அனைவர்க்கும் காட்ட அரங்கில் ஏற்றி
பொன்னாடை போர்த்திச் சிறப்பிக் கின்றேன்!
மாணவர் களுக்கு மனிதப் புனிதர்
வள்ளலார் பற்றி வளமுறும் தலைப்பில்
பேச்சுப் போட்டியும் பீடுற நடத்தி
ஒன்பது பேர்க்கு ஒன்பதி னாயிரம்;
பரிசுக ளோடு பாராட்டுச் சான்றிதழ்;
பங்கேற்ற அனைவர்க்கும் வள்ளலார் புத்தகம்;
என்று வழங்கி இயக்கம் செய்கிறேன்!
இன்னும் முதியோர் ஐம்பது பேர்க்கு
போர்வைகள் ;வளர்க்க மரத்தின் கன்றுகள்
புகலரும் தந்தை வள்ளலார் பெயரில்
பற்பல உதவிகள் வழங்கிட உள்ளேன்!
என்னை முன்னிலைப் படுத்திச் சொல்வதால்
எல்லாம் என்னால் எனநினைக் கின்ற
புல்லன் இல்லைநான்! பூவுல கத்தின்
அசைவுகள் யாவும் அருட்பெருஞ் ஜோதி
ஆண்டவன் என்பதை அறியும் சிறுவனே!
ஆயினும் என்னைப் பணிகொண் டானை
ஆயிரம் முறைநான் தொழுதெழு கின்றேன்!
அன்புடைச் சான்றீர்! அன்றைக் கிரவு
அடியேன் தலைமையில் அறிவு தழைக்கும்
பட்டி மன்றமும் பாங்குற நடக்கும்!
பரபரப் பான தீர்ப்பும் கிடைக்கும்!
சமுதாய மாற்றத்திற்குப் பெரிதும் துணை செய்பவர்
வள்ளலாரா..வள்ளுவரா..? என்பதே தலைப்பு!
அதிலும் அறுவர் பேசு கிறார்கள்!
ஆகச் செலவு .ஒருலட் சத்தைத்
தாண்டும் போலத் தெரிகிற தையா!
மேடை..பந்தல்..ஒலிபெ ருக்கி
அழைப்பிதழ் ..கூடவே வில்லுப்பாட்டு
அத்தனை செலவும் ஐயா என்னை
ஐயோ என்றே அலற வைப்பதால்
ஐயா பெயரால் அடியேன் உங்கள்
அடிகள் பற்றி அறிவிக் கின்றேன்!
அள்ளித் தருவோர் அள்ளித் தருக!
கிள்ளித் தருவோர் கிள்ளித் தருக!
பொருளாய்த் தருவோர் பொருளைத் தருக!
புத்தகம் தருவோர் புத்தகம் தருக!
போர்வைகள் தருவோர் போர்வையும் தருக!
முதல் முயற்சியில் முனைமுறி யாமல்
முனைப்பாய்த் தொடர முதலுதவி செய்க!
அறம் வளர்ப்போம்: மரமும் வளர்ப்போம்!
ஆன்ம நேயம் அதையும் வளர்ப்போம்!
உயிரி ரக்க உணர்வை வளர்ப்போம்!
ஜீவ காருண்யச் சிந்தனை வளர்ப்போம்!
மோட்ச வீட்டை இங்கேயே திறப்போம்!
முழுக்கச் சன்மார்க்க மூலம் படிப்போம்!
துணை செய்யுங்கள் தோழர்காள் நீங்கள்!
தோளிலே பாரம் தூக்கி நிற்கிறேன்!
அருள்க னிந்து ஆதரவு காட்டுங்கள்!
ஆகஸ்டுத் திங்கள் அழைப்பிதழ் வந்ததும்
அதையுங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றேன்!
படித்துப் பாருங்கள்! பார்வையில் கருணை
படரப் பாருங்கள்! பாவலன் என்னைத்
தொடரப் பாருங்கள்! தூய தொண்டுக்கு
வாழ்த்துகள் கூறி வளரச் சொல்லுங்கள்!
வாழட்டும் சமூகம் :வாழ்த்துப் பாடுங்கள்!
உங்கள் தொடர்புக்காகக் காத்திருக்கும்..
கவிஞர்.கங்கை மணிமாறன்
நிர்வாக அறங் காவலர் ,
திருவருட்பிரகாச வள்ளலார்
மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை,
கங்காதரபுரம் ,
குத்தாலம் வட்டம் ,
நாகை மாவட்டம்,
செல்;9443408824
மின் அஞ்சல் முகவரி: rgangaimanimaran@gmail.com

“சிக்”கெனப் பிடிக்க……

நெற்றிக் கண்ணைத் திறப்பதற்கு
ஒரு கதவும்,ஒரு பூட்டும் இருக்கிறது!
அந்தப் பூட்டை
அருள் என்னும் திறவுகோலைக் கொண்டு
திறக்க வேண்டும்.
அருள் என்பது..
ஆன்ம இயற்கையாகிய
பெருந்தயவு என்கிறார்– வள்ளல் பெருமான்!
தயவுதான் நம்மை
மனிதராக்கக் கூடியது!
பசியே கூட
இறைவன் அளித்த ஓர்
உபகாரக் கருவி என்கிறார் பெருமான்!
பசித்தாரைக் கண்டால்
அருள் சுரக்கிறது.
அருள் சுரந்தால் ஜீவகாருண்யம் பிறக்கிறது.
ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
என்கிறார் -வள்ளலார்.
எந்த நெருடலும் இல்லாமல்
நெஞ்சம் திறக்கிறதா இல்லையா..?
வள்ளலார் நம்மை வாழ்விக்கவே வந்தவர் –
நாம் தான் அவரைச்
சிக்கெனப் பிடிக்கத் தெரியாமல்
சீரழிந்துவிட்டோம்!

கடவுள் உங்கள் கண்ணுக்குத் தெரிவார்..!

எங்கே கடவுள்..?
எங்கும் இருக்கிறார் என்பது நீண்ட காலமாய்
கேள்விப் பட்ட செய்திதான்!
எங்கும் என்றால்..?
தூணிலும்.. துரும்பிலும்..!
இதுவும் அறிவோம் நாம்..!
எங்கும் என்றால்..
எனக்குள்ளுமிருக்கிறான் இல்லையா
என்று நாம் கேட்டுப் பார்த்ததில்லை !
எங்கும் என்றால்
அவனுக்குள்ளும் இருக்கிறான் இல்லையா
என்றும் நாம் கேட்டுப் பார்த்ததில்லை!
எனக்குள் அவனுக்குள் இருந்தால்
எல்லாருமே கடவுள் இல்லையா
என்றும் நாம் சிந்தித்ததில்லை!
இப்படி ஒரு சத்விசாரத்தில் இறங்கிப் பாருங்கள் ..
கண்டிப்பாகக்..
கடவுள் உங்கள்
கண்ணுக்குத் தெரிவார்!

தயவு செய்து….!

என்னதான் முயற்சி செய்தாலும்
புறத்தில் காண முடியாது –
கடவுளை!
ஆன்மாவின் அகத்தில் விளங்கும்
அகவெளியே
அவன் ஆடல் செய்வதற்குரிய
அரங்கமாக உள்ளது!
அங்கே அவனைத் தரிசிக்கப் பிரியப் படுவோர்கள்
அனைவர்க்கும் தேவைப் படுவது–
தயவு!
தயவு செய்து உயிர்களிடம்
தயவு காட்டுங்கள் மனிதர்களே.. !

நீரூற்ற வேண்டுகிறேன்!

146 ஆண்டுகள்
கடந்துபோய் விட்டன!
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
நிறுவப்பட்டு
146 ஆண்டுகள்
கடந்துபோய் விட்டன!
கல்லாய மனத்தையும் ஒரு கணத்தில் கனிவித்துப்
பல்லோரும் அதிசயிக்க அருட்பக்குவம் தரும்
மகா மந்திரத்தைத் தந்து
146 ஆண்டுகள்
கடந்துபோய் விட்டன!
அருட்பெருஞ்சோதி என்னும்
ஒளிவடிவான
ஒலி மந்திரம் அருளப் பெற்று
146 ஆண்டுகள்
கடந்துபோய் விட்டன!
அன்பு வேண்டும்!
அன்பு கனிந்தால் அருள் தோன்றும்!
அருள் ஜீவகாருண்யம் ஆகும் !
ஜீவ காருண்யம் பேரின்ப வீட்டின் திறவு கோலாகும்!
என்று —
மனிதகுல வாழ்வுக்கு
மகத்தான வழி கண்டு சொல்லி
146 ஆண்டுகள்
கடந்துபோய் விட்டன!
இப்போதுதான்
ஏதோ ஒருசிலரின்
இரும்பு விழித் திரைகள் திறக்கின்றன!
அடைபட்டுக் கிடந்த இரும்புச் செவிகள்
கேட்கின்றன!
ஆம் –நாம் யோசிக்கத் தொடங்கி இருக்கிறோம்!
ஆன்மாவைப் பற்றி
ஒருகடவுள் பற்றி
ஒளியே கடவுள் பற்றி
உயிரே கடவுள் பற்றி
ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைப் பற்றி —–
நிறைய யோசிக்கத் தொடங்கி இருக்கிறோம்!
திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை
என்னும் பெயரில்
ஒரு குக் கிராமத்தில் இருந்து
மக்களுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறோம்!
வள்ளலாரை மாணவச் சமுதாயத்தின் பார்வைக்கும்
கொண்டு செல்வதற்காக
மாபெரும் பேச்சுப் போட்டி
நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம் !
ஆகஸ்டு 28 -ஆம்தேதி ஞாயிற்றுக் கிழமை
அறக் கட்டளை விழாவில்
மரக் கன்றுகள் வழங்குதல்–
மக்களுக்கான அன்னதானம் —
மாணவர்களுக்கான பரிசுகள் —
வள்ளல் பெருமானையும்
வள்ளுவரையும் எளிதாக
பாமரரும் புரிந்து கொள்ள —
சமுதாய மாற்றத்திற்குப் பெரிதும் வழி கட்டுபவர் —
வள்ளுவரா..வள்ளலாரா..? என்று
என் தலைமையில்
ஓர் அற்புதப் பட்டி மன்றம் —
இப்படி நீள்கிறது துவக்க விழா!
அறப் பணிக்கான ஆயத்தம் வெல்ல
அறச் சிந்தை படைத்தோர்
அள்ளி வழங்க வேண்டாம்..
கிள்ளி வழங்கினாலே
கிழக்கு வெளுக்கும்!
மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டத்தில்
இந்தப் பணி புதியது!
ஆயினும் —
ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாமல் ஓயாது!
பன்மார்க்கமும் பசையற்றுப் போகவும்
சன்மார்க்கம் ஒன்றே தழைக்கவும்
நிறை அன்புடைய
நேச நெஞ்சங்கள்
நீரூற்ற வேண்டுகிறேன்!

முகவரி: கவிஞர் கங்கை மணிமாறன்
Q43 /1 பத்தாம் தெரு,
அத்திப்பட்டுக் குடியிருப்பு
வடசென்னை மின் நிலையம் (அஞ்சல் )
சென்னை-120
செல்;9443408824
மின்னஞ்சல்: rgangaimanimaran @ gmail .com
குறிப்பு:அழைப்பிதழ் விரைவில் இதே வழியில்
தங்கள் பார்வைக்கு வரும்

வீட்டிலும் வேண்டும் அம்மா!!

என்றும் உள்ளது
காலம் கடந்தது
பிறமொழி சாராத அசலாய் இருப்பது
கம்பீரமானது
சிறந்தது
ஆளுமை மிக்கது
தூய்மையானது
நிறைவானது
உயிரோட்டமுள்ளது
திட்பமானது
உருக்குலையாதது
முழுமையானது
சீரியது
மேலானது
நயமானது
முதல் தரமானது
உத்தமமானது
அழியாதது
நிலைபேறுள்ளது
தலைமை கொண்டது
தலையானது
முன்மாதிரியானது
வழிகாட்டியானது
வேரூன்றியது
செப்பமானது
முறையானது
மேல்வரிச் சட்டமானது
இறவாதது
உலக வழக்கில் உள்ளது
தரம் குறையாதது
என்று–
இந்த முப்பது பொருண்மைகளும்
கொண்டதே —
செம்மொழி!

அம்மொழி நம்மொழி என்னும் பெருமை
இன்று பெற்றதன்று!
தமிழ் என்று பிறந்ததோ அன்றே பெற்றது!

பிறந்த போதே சிறந்த மொழியாய்ப் பிறந்த மொழி
தமிழ் மொழி –என்று
பேசிக் கிடப்பதில் இல்லை பெருமை!
தாய்மொழியை …வீட்டில்
பேசிக் கிடப்பதேபெருமை!

நாட்டில் “அம்மா” இருக்கலாம்..!
வீட்டிலும் இருக்கவேண்டும் அம்மா!
இல்லையென்றால் —
பேசும் பெருமை எல்லாம் சும்மா!